இந்த ஆண்டு 3-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியது
மேட்டூர் அணை இந்த ஆண்டு 3-வது முறையாக 100 அடியை எட்டியது.
மேட்டூர்,
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 129 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 694 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 9 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 98.83 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 99.39 அடியாக உயர்ந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 3-வது முறையாக 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்ட அளவை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இந்த ஆண்டு கடந்த மாதம் 25-ந் தேதி முதல் முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. பின்னர் கடந்த 13-ந் தேதி 2-வது முறையாக நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அதன் பின்னர் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால், நீர்மட்டம் குறையத்தொடங்கியது. தற்போது நீர்வரத்து அதிகரித்ததால் 3-வது முறையாக 100 அடியை எட்டி பிடித்துள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story