காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 Oct 2020 2:30 PM IST (Updated: 25 Oct 2020 2:24 PM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி ஆற்றில் உற்சாகத்துடன் குளித்தனர். மேலும் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பரிசலில் 3 பேரை மட்டும் அழைத்து செல்ல வேண்டும் என்று பரிசல் ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

Next Story