திருப்பத்தூர் அருகே, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் பெண்கள் பாதுகாப்பாக குளிக்க ஏற்பாடு - நேரில் ஆய்வு செய்த அமைச்சர் நிலோபர் கபில் தகவல்


திருப்பத்தூர் அருகே, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் பெண்கள் பாதுகாப்பாக குளிக்க ஏற்பாடு - நேரில் ஆய்வு செய்த அமைச்சர் நிலோபர் கபில் தகவல்
x
தினத்தந்தி 25 Oct 2020 4:30 PM IST (Updated: 25 Oct 2020 4:11 PM IST)
t-max-icont-min-icon

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் பெண்கள் பாதுகாப்பாக குளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வு நடத்திய அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து நீர்வீழ்ச்சியை பார்த்து செல்ல செய்யப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து அமைச்சர் நிலோபர் கபில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி அதிக சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் ஈர்க்கும் இடமாக உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் நுழைய தடை உள்ளது. ஆனாலும் தடையை மீறி சிலர் இப்பகுதிக்கு வந்து குளிக்கும்போது விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. இவற்றை தடுக்க போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி பாதுகாப்பாக மக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வனத்துறையின் அனுமதி கிடைக்காமல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் செய்ய முடியாமல் உள்ளது. தற்போது பணிகளை விரைவாக மேற்கொள்ள கலெக்டர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும். நீர்வீழ்ச்சியில் பாதுகாப்பாக குளிப்பதற்கு தளம் அமைக்கப்படும்.

பெண்கள் தனியாக நீர்வீழ்ச்சியில் குளிக்க கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். சுற்றுலா பயணிகள் பாறைகள்மேல் சென்று பாறையின் உச்சியில் இருந்து குளிப்பதை தடுக்க மேலே செல்லும் பாதை உயரமான தடுப்பு வேலி கொண்டு முழுமையாக அடைக்கப்படும். பெண்கள் உடை மாற்றிட அறை ஏற்படுத்தப்படும். இதுபோன்ற பாதுகாப்பு பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வின்போது கலெக்டர் சிவன் அருள், மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, சப்-கலெக்டர் அப்துல் முனிர், வனச்சரகர் சோழராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமேதகம், சந்திரன், தாசில்தார் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படியில் ஏறும்போது அமைச்சர் நிலோபர்கபில் கால் இடறி கீழே விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை தூக்கி அருகில் இருந்த படிக்கட்டில் சிறிதுநேரம் அமரவைத்து ஆசுவாசப்படுத்தினர். அதன்பிறகு அமைச்சர் அங்கு ஆய்வு செய்தார்.

Next Story