மதுரை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியான பெண்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்வு - ஒரே கிராமத்தில் 3 பேர் உயிரிழந்ததால் ஊரே சோகம்


மதுரை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியான பெண்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்வு - ஒரே கிராமத்தில் 3 பேர் உயிரிழந்ததால் ஊரே சோகம்
x
தினத்தந்தி 25 Oct 2020 11:15 AM GMT (Updated: 25 Oct 2020 10:59 AM GMT)

மதுரை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. ஒரே கிராமத்தில் 3 பேர் உயிரிழந்ததால் அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது.

பேரையூர்,

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளத்தை அடுத்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நேற்று முன்தினம் இந்த ஆலையில் சுமார் 40 பேர் வேலை செய்தனர். மதிய நேரத்தில் இந்த பட்டாசு ஆலையில் ரசாயன பொருட்களை கலந்து கொண்டிருந்த போது, அதில் வெடிமருந்து பவுடர் திடீரென பயங்கரமாக வெடித்து தீப்பற்றியது. இதைதொடர்ந்து அருகில் உள்ள பட்டாசு அறைகளுக்கும் தீ பரவி சம்பவ இடத்திலேயே வேலுத்தாயி, அய்யம்மாள், லட்சுமி, சுருளியம்மாள், காளீசுவரி ஆகிய 5 பெண்கள் பலியானார்கள்.

மேலும் மகாலட்சுமி, இன்னொரு லட்சுமி ஆகிய பெண்களும், ஆலை மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்தி என்பவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவில் லட்சுமியும், நேற்று அதிகாலையில் மகாலட்சுமியும் பரிதாபமாக இறந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது. மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரை சேர்ந்தவர் ஆவார்.

இந்த பட்டாசு ஆலைக்கு டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காடனேரியை சேர்ந்த 23 பெண்கள் சம்பவத்தன்று வேலைக்கு சென்றிருந்தனர். இதில் வெடி விபத்தில் சிக்கி அந்த ஊரை சேர்ந்த அய்யம்மாள், லட்சுமி, மகாலட்சுமி ஆகிய 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இந்த வெடி விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகாசியை சேர்ந்த அழகர்சாமி மகன் சண்முகராஜ், கொத்தனேரியை சேர்ந்த வைரமுத்து, மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மீது, தீபாவளியை முன்னிட்டு சிறிய கட்டிடத்துக்குள் அதிகமான ஆட்களை வைத்து வேலை வாங்கியதால் ஏற்பட்ட கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வைரமுத்து என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆலையின் உரிமையாளர் சண்முகராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story