மாவட்ட செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 26 பேர் கைது + "||" + Liberation Leopards Party 26 people arrested

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 26 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 26 பேர் கைது
மனுதர்ம நூலை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனுதர்ம நூலை தடைசெய்யக்கோரி அரண்மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகம்மது யாசின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக விடுதலை முன்னணி மாநில தலைவர் ராஜசேகர், பெரியார் பேரவை மாவட்ட தலைவர் நாகேசுவரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் சிவா, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் முத்துவாப்பா, மாவட்ட அமைப்பாளர் சீனி முகம்மது சபீர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு திடீரென்று வந்த பா.ஜ.க.வினர் திருமாவளவனை கைது செய்யக்கோரியும், ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. தங்களுக்கு எதிராக வந்துள்ள பா.ஜ.க.வினரை அப்புறப்படுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருதரப்பினரையும் நெருங்கவிடாமல் தடுத்தனர். இதன்பின்னர் பா.ஜ.க.வினரை அப்புறப்படுத்தியதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 26 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.