ஆயுத பூஜையை முன்னிட்டு: பூஜை பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்


ஆயுத பூஜையை முன்னிட்டு: பூஜை பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 25 Oct 2020 1:45 PM GMT (Updated: 25 Oct 2020 1:38 PM GMT)

ஆயுத பூஜையை முன்னிட்டு தேனி, கம்பம் உள்பட பல்வேறு இடங்களில் அவல், பொரி, பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

தேனி,

ஆயுதபூஜை தினத்தன்று வணிக நிறுவனம், தொழிற்கூடங்கள், வீடுகளில் தொழில் சிறக்க வேண்டி பூஜை செய்து பொதுமக்கள் வழிபடுவார்கள். அப்போது தங்களது தொழிற்கூடங்களையும், ஆயுதங்களையும் சுத்தப்படுத்தி அலங்காரம் செய்வார்கள். மேலும் வாகனங்களும் அலங்கரிக்கப்படும். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆயுதபூஜையும், நாளை (திங்கட்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அலங்கார தோரணங்கள், பூஜை பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. மேலும் பூஜையில் இடம் பெறும் பொரி, கடலை, வெல்லம், வாழைக்கன்று, பூக்கள் போன்ற பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.

அதன்படி, தேனி நகரின் சாலை ஓரங்களில் ஆங்காங்கே தற்காலிக கடைகள் போடப்பட்டு இருந்தன. தேனியில் நேற்று வாரச்சந்தை நாள் என்பதால், சந்தை வளாகத்திலும் இத்தகைய பொருட்கள் விற்பனை களைகட்டியது. மேலும், ஆயுதபூஜையை முன்னிட்டு லாரி பட்டறைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அலங்காரம் செய்ய தேவையான பொருட் கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதேபோல் ஆயுதபூஜை நாளில் பூஜைகளை முடித்துவிட்டு திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய் உடைப்பதும் வழக்கம். இதனால், சந்தையில் பூசணிக்காய் விற்பனையும் களை கட்டியது. பூஜை பொருட்கள் விற்பனை கடைகள், பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் முக கவசம் அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேனி வாரச்சந்தை மற்றும் தற்காலிக கடைகளில் வியாபாரிகள் பலரும் முக கவசம் அணியவில்லை. பொதுமக்களும் முக கவசம் அணியாமல் பொருட்கள் வாங்கிச் சென்றனர். சமூக இடைவெளியின்றி மக்கள் நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு காய்கறிகளை வாங்கிச் சென்றனர். அதேநேரத்தில், பொருட்கள் வாங்க மக்கள் அதிக அளவில் வந்ததால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதேபோன்று கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

Next Story