கடலூரில், வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு - கிலோ ரூ.80-க்கு விற்பனை


கடலூரில், வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு - கிலோ ரூ.80-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 Oct 2020 1:30 PM GMT (Updated: 25 Oct 2020 1:38 PM GMT)

பெங்களூருவில் இருந்து கடலூருக்கு வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர்,

வடமாநிலங்களில் பெய்த கனமழையால் பல்லாரி வெங்காயம் அழுகி போனதாலும், பல இடங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பல்லாரி, சாம்பார் வெங்காயம் வரத்து முற்றிலும் குறைந்து போனது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

கடலூரில் கடந்த மாதத்தில் இருந்தே பெரிய வெங்காயத்தின் விலை உயரத்தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக பல்லாரி (பெரியது) ஒரு கிலோ ரூ.70-க்கும், பல்லாரி (நடுத்தரம்) ரூ.60-க்கும் விற்பனையானது. அதே போல் சாம்பார் வெங்காயம் சராசரியாக கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு அதிகளவில் பல்லாரி வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிரடியாக விலை குறையும் என்று காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பெங்களூருவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும், பல்லாரி வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதாவது கடந்த வாரம் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட பல்லாரி வெங்காயம் நேற்று ரூ.80-க்கு விற்பனையானது. அதேபோல் ரூ.60-க்கும் விற்ற வெங்காயம் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் ஆயுத பூஜையையொட்டி விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பல்லாரி வெங்காயத்தை வாங்கி சென்றதை காண முடிந்தது.

வெங்காயம் விலை குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக கடலூர் மாவட்டத்துக்கு ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தான் பல்லாரி வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். ஆனால் தற்போது அந்த மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், வெங்காயம் கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனால் பெங்களூருவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் பல்லாரி வெங்காயத்துக்கான தட்டுப்பாடு அதிகளவில் உள்ளதால், விலை குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

Next Story