ரூ.20 லட்சம் வரை மோசடி போலியான செல்போன் செயலிகளை உருவாக்கி ‘தட்கல்’ ரெயில் டிக்கெட் முன்பதிவு - காங்கேயம் என்ஜினீயர் கைது
போலியான செல்போன் செயலிகளை உருவாக்கி ‘தட்கல்’ ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து ரூ.20 லட்சம் வரை பணம் மோசடியில் ஈடுபட்ட காங்கேயம் என்ஜினீயரை ரெயில்வே பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர்.
திருப்பூர்,
போலியான இணையதளம் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து மோசடியில் ஈடுபடுவதாக தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக பாதுகாப்புப்படை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து பாதுகாப்புப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர முயற்சியில், போலியான செயலிகளை உருவாக்கி தட்கல் முறையில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாக திருப்பூரை சேர்ந்த என்ஜினீயரான யுவராஜ் என்பவரை திருப்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பொதியம்பாளையத்தை சேர்ந்த இவர் தட்கல் முறையில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, 2 செல்போன் செயலிகளை உருவாக்கி உள்ளார்.
அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தால், ஒரு டிக்கெட்டுக்கு 5 புள்ளிகள், முன்பதிவு செய்த நபருக்கு வழங்கப்படுவதாக விளம்பரம் செய்துள்ளார். மேலும் அந்த புள்ளிகளை புதுவகையான தொழில்நுட்பத்தின் மூலம் பணமாக மாற்றும் வகையில் வடிவமைத்துள்ளார். அந்தவகையில் 10 புள்ளிகள் பெற்றால் 20 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த பணம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நபரின் வங்கி கணக்கு வந்து சேரும் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.
ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் நபரின் வங்கி கணக்குக்கு பணம் செல்லாமல், யுவராஜாவின் வங்கி கணக்குக்கு பணம் வந்து சேரும் வகையில் அந்த செயலியை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அந்தவகையில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் மூலம் ரூ.20 லட்சம் வரையில் மோசடியில் ஈடுபட்டிருப்பதை ரெயில்வே பாதுகாப்புப்படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்களை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story