திண்டுக்கல்லில், ஆயுதபூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது


திண்டுக்கல்லில், ஆயுதபூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது
x
தினத்தந்தி 25 Oct 2020 7:30 PM IST (Updated: 25 Oct 2020 8:28 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஆயுதபூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.

திண்டுக்கல்,

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்வார்கள். அதேபோல் வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகளிலும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதற்காக நேற்று காலையிலேயே வீடு, அலுவலகங்கள், கடைகளை சுத்தம் செய்து ஆயுதபூஜைக்கு தயாராகினர். மேலும் பூஜைக்கு தேவையான பொருட்களை நேற்று காலையில் இருந்தே மக்கள் வாங்க தொடங்கினர். ஆயுதபூஜையில் முக்கிய இடம் பெறுவது அவல், பொரி மற்றும் கடலை ஆகும்.

இதற்காக திண்டுக்கல்லில் நாகல்நகர், பெரியகடைவீதி, மெயின்ரோடு, திருச்சி சாலை உள்பட முக்கிய பகுதிகளில் சாலையோரத்தில் பொரி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் ரூ.20-க்கு அவல், பொரி, கடலை அடங்கிய பொட்டலம் விற்பனை செய்யப்பட்டது. இதை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதுதவிர தேங்காய், வெற்றிலை, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பூஜை பொருட்களையும் வாங்கினர்.

இதனால் நேற்று தேங்காயின் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வரை ரூ.15-க்கு விற்ற சிறிய அளவிலான தேங்காய் நேற்று ரூ.20-க்கு விற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை பூஜைக்காக மக்கள் வாங்கி சென்றனர். இதனால் பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. அதன்படி கிலோ ரூ.100-க்கு விற்ற ஆப்பிள் ரூ.140-க்கும், ரூ.80-க்கு விற்ற மாதுளை ரூ.120-க்கும், ரூ.50-க்கு விற்ற சாத்துக்குடி ரூ.70-க்கும் விற்பனை ஆனது.

இதுதவிர ஆயுதபூஜையையொட்டி வாகனங்களிலும், அலுவலகங்கள் மற்றும் கடைகளின் வாசலிலும் வாழைக்கன்றுகள் கட்டப்படுவது உண்டு. எனவே, வாழைக்கன்றுகளின் விற்பனையும் மும்முரமாக நடந்தது. திண்டுக்கல் நகரில் அனைத்து இடங்களிலும் சாலையோரத்தில் வாழைக் கன்றுகள் விற்கப்பட்டன. ஒருசில இடங்களில் சரக்கு வாகனங்களில் வைத்தும் விற்கப்பட்டன. இதில் ஒரு ஜோடி வாழைக்கன்று ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை ஆனது.

அதேபோல் வாழை இலையின் விலையும் நேற்று கடுமையாக உயர்ந்தது. ஒரு இலை ரூ.10 வரை விற்கப்பட்டது. எனினும், மக்கள் பூஜைக்காக அதை வாங்கினர். மேலும் வண்ண கோலப்பொடி, பூக்கள், அலங்கார பிளாஸ்டிக் பூக்கள் ஆகியவற்றின் விற்பனையும் களைகட்டியது. இதனால் திண்டுக்கல்லில் முக்கிய சாலைகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

Next Story