திருமணம் ஆன பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த வாலிபருக்கு கத்திக்குத்து கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு


திருமணம் ஆன பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த வாலிபருக்கு கத்திக்குத்து கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 Oct 2020 2:38 AM GMT (Updated: 26 Oct 2020 2:38 AM GMT)

கோவையில் திருமணம் ஆன பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை,

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பதியை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது 21). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால்பாண்டிக்கு, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் பால்பாண்டியும், அந்த பெண்ணும் தங்களின் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். இந்த விவகாரம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்தார்.

சேர்ந்து வாழ்ந்தனர்

பின்னர் தனது கணவர் கண்டித்தது குறித்து அந்த பெண் பால்பாண்டியிடம் தெரிவித்தார். உடனே கடந்த 14-ந் தேதி பால்பாண்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அந்த பெண் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் அந்த பெண்ணின் கணவர் இல்லை. அந்த நேரத்தில் பால்பாண்டி அந்த பெண் மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோவை வந்தார். பின்னர் துடியலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் தனது மனைவி குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்ததால், அதிர்ச்சியடைந்த கணவர் அவர்களை தேடி வந்தார். அப்போது கோவையில் தனது மனைவி பால்பாண்டியுடன் சேர்ந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது நண்பர்கள் 3 பேருடன் கோவை வந்தார். பின்னர் அவர் கோவையில் உள்ள தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் பால்பாண்டியின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டார். பின்னர் பால்பாண்டியை தொடர்பு கொண்டு நைசாக பேசி அவரை காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வருமாறு அழைத்தார். அவர் அழைத்த இடத்துக்கு பால்பாண்டி வந்தார்.

4 பேர் மீது வழக்கு

அப்போது அங்கிருந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர் சேர்ந்து, உருட்டு கட்டையால் அவரை தாக்கினர். உடனே அவர்களது தாக்குதலில் இருந்து பால்பாண்டி தப்பி ஓட முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பால்பாண்டியின் வயிற்றில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பால்பாண்டியை கத்தியால் குத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story