குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் போலீசாருக்கு டி.ஐ.ஜி. அறிவுரை
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஐ.ஜி. எழிலரசன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் சரக காவல்துறை சார்பில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான சிறார் நீதி சட்டம் குறித்த பயிற்சி கூட்டம் நேற்று காலை விழுப்புரத்தில் நடைபெற்றது.
பயிற்சிக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் வரவேற்றார். நீதிபதிகள் அருண்குமார், முத்துக்குமாரவேல், சென்னை குழந்தைகள் நல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்து போலீசாருக்கு கருத்துரை வழங்கினர்.
அறிவுரை
இப்பயிற்சியை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எழிலரசன் தொடங்கி வைத்து குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, அவர்களின் பாதுகாப்பு நலம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இந்த பயிற்சியை குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் நல்லமுறையில் உள்வாங்கிக்கொண்டு வழக்கு சம்பந்தமான புலன் விசாரணையை சிறப்பாக மேம்படுத்தி குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் உச்சபட்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கான எதிரான குற்றங்களை குறைப்பதோடு மட்டுமின்றி அவர்களின் பாதுகாப்பு நலம் குறித்தும் பொதுமக்கள் குறிப்பாக பெண்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றங்கள் குறைய முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கினார்.
இதையடுத்து போக்சோ பிரிவுகள் குறித்து அரசு சிறப்பு வக்கீல் கலா, குழந்தைகளுக்கான சிறுவயது பிரச்சினைகள் பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் புகழேந்தியும் பயிற்சி அளித்தனர். அதேபோல் குழந்தைகள் நல குழுமத்தின் பங்குகள் பற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சசிக்குமார், அரசு வக்கீல் செம்புலிங்கம் ஆகியோரும், குழந்தைகளின் பிரச்சினைகளுக்கான நீதிகள், குழந்தைகள் பாதுகாப்பு பற்றி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திலகவதியும், குழந்தை திருமண தடை சட்டம் பற்றி சமூகநல நிர்வாக அலுவலர் பத்மாவதியும் விளக்கவுரையாற்றினர்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், குற்ற தொடர்வுத்துறை கூடுதல் இயக்குனர் செல்வராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகள் நல காவல் அலுவலர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story