புதிய பஸ் நிலையம் இயங்க தொடங்கியது அரசு, தனியார் பஸ்கள் வந்து சென்றன


புதிய பஸ் நிலையம் இயங்க தொடங்கியது அரசு, தனியார் பஸ்கள் வந்து சென்றன
x
தினத்தந்தி 27 Oct 2020 1:18 AM GMT (Updated: 2020-10-27T06:48:36+05:30)

புதுவை புதிய பஸ் நிலையம் முழுமையாக இயங்க தொடங்கியது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து சென்றன.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பெரிய மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகள் புதிய மற்றும் பழைய பஸ் நிலைய பகுதிக்கு மாற்றப்பட்டன. ஊரடங்கு தளர்வு காரணமாக ஏற்கனவே சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா காலத்தில் சாலை வரி ரத்து செய்யப்பட்ட நிலையில் தனியார் பஸ்களும் தற்போது ஓடத் தொடங்கி உள்ளன.

ஆனால் புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் செயல்பட்டதால் இந்த பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்தின் வெளியில் இருந்து புறப்பட்டுச் சென்றன. இதனால் ரோட்டினை அடைத்துக் கொண்டு பஸ்களும் வாகனங்களும் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களும் அவதிக்குள்ளானார்கள். விபத்து அபாயமும் அதிகரித்தது.

இந்த நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு தற்காலிக காய்கறி கடைகளை அகற்ற அரசு முடிவு செய்தது. அதன்படி கடைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையம் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

நேற்று முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செயல்படத் தொடங்கின. கர்நாடக அரசு பஸ்களும் ஓடத்தொடங்கின. இதனால் புதிய பஸ் நிலையத்தில் கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முன் இருந்த பழைய நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. புதுவையில் இருந்து பெங்களூருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பஸ் விடப்படுகிறது.

ஆனால் தமிழக அரசு பஸ்களை புதுவையில் இருந்து இயக்கவோ, ஆட்களை ஏற்றி இறக்கவோ இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படாத நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பஸ்கள் நிற்கும் இடம் காலியாகவே காணப்பட்டது.

இந்த வார இறுதிக்குள் தமிழக பகுதிக்கு பஸ்கள் விடப்படுவது குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story