கொரோனா பரவல் எதிரொலி: பெரும்பாலான கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ரத்து
கொரோனா பரவல் எதிரொலியாக பெரும்பாலான கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
கூடலூர்,
நாடு முழுவதும் நவராத்திரி விழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது. அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மன் சன்னிதானத்தில் விழா தொடங்கியது. மேலும் கோவில் மண்டபத்தில் கொலு பொம்மைகள் மட்டும் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தினமும் மாலை அம்மனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் ஊரடங்கால் பக்தர்கள் வருகையை தடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று விஜயதசமியையொட்டி துர்க்கை அம்மனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதேபோன்று பெரும்பாலான கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. மேலும் பக்தர்கள் வருகையும் மிகக்குறைவாகவே இருந்தது.
ரத்து
பந்தலூர், உப்பட்டி முருகன் கோவில்கள், சேரம்பாடி விநாயகர் கோவில், எருமாடு சிவன் கோவில், அய்யன்கொல்லி மாரியம்மன் கோவில், வாலாடு மகாவிஷ்ணு கோவில், பிதிர்காடு தஞ்சோரா கோவில், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் விஜயதசமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சில கோவில்களில் மட்டும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து இருந்தனர். அப்போது பச்சரிசியில் ஓம் என்று குழந்தைகளின் விரல்களை பிடித்து கோவில் அர்ச்சகர்கள் எழுதி வேத மந்திரங்களை கூறினர்.
இதேபோன்று ஊட்டியில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட முக்கிய கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆனால் வேத அர்ச்சகர்கள் சிலர் தங்களது வீடுகளில் இருந்து வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்தினர். மேலும் குன்னூர் பகுதியிலும் சில கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டை போல இல்லாமல் வித்யாரம்பம் நிகழ்ச்சி பெரும்பாலான கோவில்களில் நடைபெறவில்லை.
Related Tags :
Next Story