திருக்கோவிலூர் அருகே பரபரப்பு பள்ளி மாணவியை கடத்தி மகனுக்கு திருமணம் தாய்-தந்தை கைது
திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று மகனுக்கு திருமணம் செய்து வைத்த தாய்-தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரை அடுத்த அம்மன் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரபாகரன்(வயது 27). கரும்பு வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது தந்தை ஆறுமுகம், தாய் முனியம்மாள் மற்றும் அண்ணன் ரவி ஆகியோரின் உதவியுடன் அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று விட்டார்.இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பிரபாகரன் வீட்டுக்கு சென்றார். ஆனால் வீட்டில் யாரும் இல்லை என தெரிகிறது. இதையடுத்து பிரபாகரன், ஆறுமுகம், முனியம்மாள், ரவி ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்து அவர்களை வலைவீசி தேடி வந்தார்.
தாய்-தந்தை கைது
இந்த நிலையில் மாணவியை கடத்திச்சென்ற பிரபாகரன் பண்ருட்டியில் வைத்து அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருக்கோவிலூர் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பிரபாகரனின் தந்தை ஆறுமுகம், தாய் முனியம்மாள் ஆகியோர் சிக்கினர். பின்னர் இவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் விசாரணை நடத்தினார்.
இதில் மாணவியை கடத்தி சென்று பிரபாகரன் திருமணம் செய்து கொண்டது உண்மை என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மாணவியுடன் தலைமறைவான பிரபாகரன், ரவி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்ட வாலிபரின் தாய்-தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story