அகல ரெயில்பாதை பணி இறுதிக்கட்டம்: 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டிப்பட்டிக்கு வந்த ரெயில் பொதுமக்கள் மகிழ்ச்சி
அகல ரெயில்பாதை பணி இறுதிக்கட்டத்தை அடைந்ததையடுத்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டிப்பட்டிக்கு ரெயில் வந்தது. இதை பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.
ஆண்டிப்பட்டி,
மதுரையில் இருந்து போடி வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது மீட்டர்கேஜ் ரெயில்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. கடந்த 2009-ம் ஆண்டு இந்த ரெயில்பாதையை, அகல ரெயில்பாதையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததால், அகல ரெயில்பாதை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. முதற்கட்டமாக, கடந்த ஆண்டு மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு உசிலம்பட்டியில் இருந்து தேனி வரையிலான பணிகள் வேகமாக நடைபெற்றது. தற்போது இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்தநிலையில் ஆண்டிப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அகல ரெயில்பாதையில் நேற்று முன்தினம் காலை ரெயில் வந்தது. 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டிப்பட்டிக்கு ரெயில் வந்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் சென்று பார்த்து மகிழ்ந்தனர். மேலும் ரெயில் முன் நின்று ‘செல்பி‘ எடுத்து கொண்டனர். இந்த ரெயிலில், அகல ரெயில்பாதைக்கு தேவையான ஜல்லிக்கற்கள் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, மதுரையில் இருந்து தேனி வரையிலான சுமார் 75 கிலோமீட்டர் அகல ரெயில்பாதை பணிகள் முடிவடைந்து விட்டது. மிக விரைவில், சோதனை ரெயில் ஓட்டம் நடத்தப்படும். இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மதுரை-தேனி வரை பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்படும். அதன்பிறகு போடி வரை அகல ரெயில்பாதை பணிகள் முடிக்கப்படும் என்றனர். ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு வந்தாலும், 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டிப்பட்டிக்கு ரெயில் வந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story