சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே சுரங்கப்பாதை பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது போக்குவரத்து பாதிப்பு


சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே சுரங்கப்பாதை பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 27 Oct 2020 10:04 AM IST (Updated: 27 Oct 2020 10:04 AM IST)
t-max-icont-min-icon

சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே சுரங்கப்பாதை பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெரம்பூர், 

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே பூங்காநகர் மின்சார ரெயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக பிராட்வே-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டி அதன்மேல் பகுதியில் இரும்பு தகடுகள் போடப்பட்டு கீழே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலே போக்குவரத்தும் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் இந்த இரும்பு தகடுகள் வழியாக தினமும் சென்று வருகின்றன.

கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லியை அடுத்த வேலப்பன்சாவடிக்கு கன்டெய்னர் லாரி ஒன்று 7 இரும்பு சுருள்களை (ஒவ்வொன்றும் 11 டன்) ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஆனையாமலையைச் சேர்ந்த சசிகுமார் (வயது 43) என்பவர் ஓட்டினார்.

சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை பணிக்காக போடப்பட்டு இருந்த இரும்பு தகடுகள் வழியாக லாரி ஏறிச்சென்றது. அப்போது இரும்பு சுருளுடன் 90 டன் மொத்த எடைகொண்ட கன்டெய்னர் லாரியின் பாரம் தாங்காமல் இரும்பு தகடுகள் பள்ளத்தில் இறங்கியதால் சுரங்கப்பாதைக்கு தோண்டிய பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது.

லாரியின் பின்பக்க சக்கரங்கள், அதில் இருந்த இரும்பு சுருள்கள் சுரங்கப்பாதைக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து கிடந்தது. லாரியின் முன்பகுதி அந்தரத்தில் தூக்கியபடி நின்றது. ஆயுதபூஜை விடுமுறை என்பதால் சுரங்கப்பாதை பணியில் தொழிலாளர்கள் யாரும் ஈடுபடவில்லை. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூக்கடை போக்குவரத்து போலீசார், சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

பின்னர் ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் விடிய விடிய போராடி சுரங்கப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரி மற்றும் இரும்பு சுருள்களை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு மீண்டும் அந்த பகுதியில் இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதுகுறித்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story