சென்னை கோவில்களில் நவராத்திரி விழா நிறைவு அய்யப்பன் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது
சென்னையில் உள்ள கோவில்களில் நடந்து வந்த நவராத்திரி விழா நேற்றுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. விஜயதசமியையொட்டி அண்ணாமலை நகர் அய்யப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சென்னை,
நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு நவராத்திரி விழா கடந்த 17-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. முக்கிய திருவிழாவான சரஸ்வதி பூஜை நேற்று முன்தினமும், விஜயதசமி நேற்றும் கொண்டாடப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், திருவொற்றியூர் தியாகராஜ சாமி உள்பட பல்வேறு கோவில்களில் இணையதளம் மூலம் சிறப்பு வழிபாடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அத்துடன் விழா நாட்களில் அம்பிகையின் சிறப்புகளை விளக்கும் சொற்பொழிவுகளும் நடந்தன.
வேதவல்லி தாயார் புறப்பாடு
108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்த பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந்தேதி தொடங்கி கடந்த 25-ந்தேதியுடன் முடிவடைந்தது.
அதேபோல் மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் நடந்த நவராத்திரி விழாவில் தினமும் அம்மனுக்கு பூஜையும், அபிஷேக, ஆராதனையும் நடந்தது. சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. இதுதவிர சென்னையில் உள்ள கோவில்களில் நடந்து வந்த நவராத்திரி விழா கோலாகலமாக நேற்றுடன் நிறைவடைந்தது. இதேபோல் சென்னை மாநகரில் உள்ள பல்வேறு வீடுகளிலும் வைக்கப்பட்டு இருந்த கொலு வழிபாடும் நேற்றுடன் நிறைவடைந்தது. கொலு வழிபாட்டில் வைக்கப்பட்ட முளைகட்டிய நவதானியங்களை நீர் நிலைகளில் பொதுமக்கள் கரைத்தனர்.
ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
சென்னை அடையாறு, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு படிப்பை தொடங்கும் ஏடு தொடங்கும் வித்யா ரம்பம் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது.
சுமார் நூறு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கப்பட்டது. வழக்கமாக நடக்கும் மகாலிங்கபுரம் அய்யப்பன், குருவாயூரப்பன், அண்ணாநகர் அய்யப்பன் கோவில்களில் கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
Related Tags :
Next Story