பாளையங்கோட்டையில் தசரா திருவிழா: 12 அம்மன் கோவில் சப்பரங்கள் பவனி


பாளையங்கோட்டையில் தசரா திருவிழா: 12 அம்மன் கோவில் சப்பரங்கள் பவனி
x
தினத்தந்தி 27 Oct 2020 5:24 AM GMT (Updated: 27 Oct 2020 5:24 AM GMT)

தசரா திருவிழாவையொட்டி பாளையங்கோட்டையில் நேற்று 12 அம்மன் கோவில்களின் சப்பரங்கள் பவனி நடந்தது.

நெல்லை, 

நெல்லை மாநகரில் தசரா விழாவுக்கு பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதே போல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன், புது உலகம்மன் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழா தொடங்கி நடந்தது.

கொரோனா தொற்று காரணமாக தசரா திருவிழா மும்முரமாக நடக்க அதிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சப்பரங்கள் அணிவகுப்பு நடத்த தேங்காய், பழம் உடைக்க தடை செய்யப்பட்டுள்ளது. தசரா திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் நடப்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

சூரசம்ஹாரம்

இந்த நிலையில் நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி 12 அம்மன் கோவில்களில் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 12 அம்மன் கோவில் சப்பரங்களும் பவனியாக பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு வந்து அணிவகுத்து நின்றன. நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடந்தது.

முன்னதாக சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்திற்கு கலெக்டர் ஷில்பா இரவில் வந்தார். அவர் அங்கு இருந்த பக்தர்களிடம் முககவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறினார். பின்னர் அவர் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார்.

மாரியம்மன் கோவில்

இதேபோல் நெல்லை டவுனில் புட்டாபுரத்தி அம்மன் கோவில், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், முப்பிடாதி அம்மன், வாகையடி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், துர்க்கை அம்மன், தங்கம்மன், மாரியம்மன், சாலியர் தெரு மாரியம்மன் உள்ளிட்ட 30 அம்மன் கோவில்களில் நேற்று தசரா திருவிழா நடந்தது.

இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் சப்பரத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு அங்கே வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

நெல்லை டவுன் சாலியர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தசரா திருவிழா நடத்துவதற்கும், சப்பர பவனி நடத்துவதற்கும் கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று மாரியம்மன் கோவிலில் தசரா திருவிழா நடந்தது. இரவு 9 மணிக்கு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வருதல் நடைபெற்றது. 

Next Story