ராஜராஜ சோழன் சதயவிழா: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு 48 வகை அபிஷேகம்
ராஜராஜ சோழன் சதயவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம் நடந்தது. அப்போது தமிழில் வழிபாடு நடந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பட்டிமன்றம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் என 2 நாட்கள் சதயவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஒரு நாள் மட்டுமே எளிய முறையில் சதயவிழா நேற்று நடைபெற்றது.
நேற்று ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னர் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு திருவேற்காடு கருமாரிபட்டர் அய்யப்ப சுவாமிகள் சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
48 வகையான அபிஷேகம்
தொடர்ந்து தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறை நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, கோவிலின் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் நந்தி மண்டபத்தில் ஓதுவார்கள் அமர்ந்து பாராயணம் பாடினர். குஜராத்தில் இருந்து மீட்டு வரப்பட்ட ராஜராஜசோழன், உலோகமாதேவி சிலை முன்பு புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியர்கள் சிறப்பு யாகம் செய்தனர்.
பின்னர் பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு திரவியப்பொடி, வாசனைப்பொடி, மஞ்சள்பொடி, அரிசிமாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர் உள்ளிட்ட 48 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு மலர்அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
தமிழில் வழிபாடு
அப்போது சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழிலும் வழிபாடு நடந்தது. கருவறைக்கு வெளியே 10 ஓதுவார்கள் அமர்ந்து தேவாரம், திருவாசகத்தை பாடி தமிழில் வழிபாடு செய்தனர். சன்னதிக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சன்னதிக்கு வெளியே வரிசையாக சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மாலையில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பெரியகோவில் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நடராஜர் சன்னதியில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story