திருமணத்துக்கு மறுத்த டி.வி. நடிகைக்கு கத்திக்குத்து


திருமணத்துக்கு மறுத்த டி.வி. நடிகைக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 28 Oct 2020 7:08 AM IST (Updated: 28 Oct 2020 7:08 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்துக்கு மறுத்த டி.வி. நடிகையை ஒருவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை, 

மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருபவர் டி.வி. நடிகை மால்வி மல்கோத்ரா. இவர் ‘சோப் உதான்’ என்ற டி.வி. நிகழ்ச்சியில் நடித்து பிரபலம் ஆனவர். மால்வி நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அந்தேரி வெர்சோவா பகுதியில் நடந்துசென்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு சொகுசு காரில் வந்த ஒருவர், நடிகை மால்வியை வழிமறித்தார். பின்னர் அவர் நடிகையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென அவர் கத்தியை எடுத்து மால்வியை சரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடினார்.

இதில் நடிகையின் வயிறு மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணத்துக்குமறுத்ததால் ஆத்திரம்

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருமணத்திற்கு மறுத்த ஆத்திரத்தில் மகிபால் சிங் என்பவர் டி.வி. நடிகை மால்வியை கத்தியால் குத்தியது தெரியவந்தது. மால்விக்கும், மகிபால் சிங்கிற்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகையை வற்புறுத்தி உள்ளார்.

நடிகை மால்வி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வெர்சோவா போலீசார் மகிபால் சிங்கை தேடிவருகின்றனர்.

டி.வி. நடிகை ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story