நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சாமுண்டீஸ்வரி அம்மன் பல்லக்கை இழுத்த கலெக்டர் ரோகிணி சிந்தூரி
நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கலெக்டர் ரோகிணி சிந்தூரி சாமுண்டீஸ்வரி அம்மன் பல்லக்கை இழுத்தார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மைசூரு,
மைசூரு தசரா விழா உலக பிரசித்திபெற்றது. இந்த ஆண்டு மைசூரு தசரா விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 10 நாட்களாக நடந்து முடிந்தது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியே ஜம்பு சவாரி ஊர்வலம்தான். ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் தசரா விழா இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. மைசூரு சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதன் மூலம் தொடங்கப்படும் இந்த தசரா விழா, விஜயதசமி அன்று ஜம்பு சவாரி ஊர்வலம் முடிந்ததும் பல்லக்கு ஊர்வலத்துடன் முடிவடையும்.
அதாவது தசரா விழாவையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 9 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்து முடிந்தவுடன் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதையடுத்து கோவில் வளாகத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க பல்லக்கு ஊர்வலம் நடைபெறும். அத்துடன் தசரா விழா நிறைவு பெறும்.
பல்லக்கு ஊர்வலம்
அதேபோல் இந்த ஆண்டும் தசரா விழாவையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 9 நாட்களாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பின்னர் விஜயதசமி அன்று மைசூரு அரண்மனை வளாகத்தில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெற்றது. அது முடிந்ததும் மாலையில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
இதில் மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தனது பெற்றோர், கணவர் மற்றும் மகளுடன் கலந்து கொண்டு அம்மன் பல்லக்கை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். முன்னதாக அவர் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும்போதும் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருந்தார்.
பணியில் நீடிப்பாரா?
அதாவது கலெக்டர் ரோகிணி சிந்தூரிக்கு முன்னதாக மைசூரு மாவட்ட கலெக்டராக சரத் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் பணியில் அமர்த்தப்பட்டு 29 நாட்களில் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாகத்தான் மைசூரு மாவட்ட கலெக்டராக ரோகிணி சிந்தூரி நியமிக்கப்பட்டார். அதுவும் தசரா விழா தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த வேளையில் திடீரென சரத் பணி இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ரோகிணி சிந்தூரி நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே ஐ.ஏ.எஸ். அதிகாரியான சரத் தனது பணி இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் ரோகிணி சிந்தூரி மைசூரு மாவட்ட கலெக்டராக நீடிப்பாரா?, தசரா விழா முடியும் வரை பணியில் இருப்பாரா? என்று சந்தேகங்கள் எழுந்தன.
நேர்த்திக்கடன் செலுத்தினார்
ஆனால் தன்னை தொடர்ந்து இங்கேயே பணியில் வைத்திருக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து பல்லக்கு இழுப்பதாகவும் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் கலெக்டர் ரோகிணி சிந்தூரி வேண்டுதல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர் வேண்டியபடியே நடந்ததால் அவர் தனது குடும்பத்துடன் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்து அம்மன் பல்லக்கை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Related Tags :
Next Story