பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்; 2 பேர் கைது ரூ.13½ லட்சம் பறிமுதல்
பெங்களூருவில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.13½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு,
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து இந்தியா முழுவதும் சூதாட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் அதிகரித்து உள்ளது. சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்வதுடன், பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
ரூ.13½ லட்சம் பறிமுதல்
பெங்களூரு மல்லேசுவரம் 11-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டம் நடப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இருந்த 2 பேர், டி.வி.யில் ஐ.பி.எல். கிரிக்கெட்டை பார்த்தபடியே சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்களது பெயர்கள் ஹொய்சாலா கவுடா(வயது 48), நரசிம்மமூர்த்தி(38) என்பது தெரிந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.13½ லட்சம் ரொக்கம், 2 செல்போன்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேர் மீதும் வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story