பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி அக்காள்-தங்கை பலி
ஆவடி அருகே பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி அக்காள்-தங்கை இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
ஆவடி,
ஆவடியை அடுத்த பொத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, லாரி டிரைவர். இவருடைய மகள் ரதிமீனா (வயது 13). இவர், பொத்தூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அரசினர் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
தட்சிணாமூர்த்தியின் தம்பி சின்னதுரை. கட்டிட மேஸ்திரியான இவருடைய மகள் காயத்ரி (15). இவரும் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அண்ணன்-தம்பி இருவரும் ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு சொந்தமான சுமார் 1½ ஏக்கர் விவசாய நிலம் வீட்டை ஒட்டி உள்ளது. இந்த நிலத்தில் ஆங்காங்கே மண் வெட்டி எடுக்கப்பட்டதால் பள்ளம் ஏற்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் குட்டைபோல் காணப்படுகிறது.
தண்ணீரில் மூழ்கி பலி
அக்காள்-தங்கைகளான காயத்ரி, ரதிமீனா இருவரும் நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடினர். பின்னர் வீட்டின் அருகில் பள்ளத்தில் குட்டைபோல் தேங்கி நின்ற தண்ணீரில் கை, கால்களை கழுவ முயன்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் அந்த பள்ளத்தில் தவறி விழுந்தனர். அந்த பள்ளத்தில் ஆழம் அதிகமாகவும், தண்ணீர் நிரம்பியும் இருந்ததால் காயத்ரி, ரதிமீனா இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் அக்காள்-தங்கை இருவரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story