பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 12 அம்மன்களுக்கும் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி


பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 12 அம்மன்களுக்கும் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 28 Oct 2020 5:34 AM GMT (Updated: 28 Oct 2020 5:34 AM GMT)

பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவை முன்னிட்டு, 12அம்மன்களுக்கும் தாமிரபரணி ஆற்றில் நேற்று தீர்த்தவாரி நடந்தது.

நெல்லை, 

நெல்லை மாநகரில் தசரா விழாவுக்கு பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்புடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன், புது உலகம்மன், பேராச்சி அம்மன் ஆகிய 12 கோவில்களிலும் நேற்று முன்தினம் தசரா திருவிழா நடந்தது.

இதையொட்டி அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் 12 அம்மன் கோவில் சப்பரங்கள் கோவிலிலிருந்து புறப்பட்டு பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அப்போது சூரசம்ஹாரம் நடந்தது. இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் படப்பு தீபாரதனை நடைபெற்றது.

தீர்த்தவாரி

பின்னர் அங்கிருந்து அனைத்து சப்பரங்களும் ஆயிரத்தம்மன் கோவிலுக்கு வந்தன. அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து சப்பரங்கள் அந்தந்த கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் 12 அம்மன் கோவில்களிலும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

பின்னர் 12 அம்மன்களும் கோவிலிலிருந்து தாமிரபரணி ஆற்றுக்கு எழுந்தருளினார்கள். அங்கு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன்கள் கோவில்களுக்கு எழுந்தருளினர்.

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் நேற்று அம்மன் சிவசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதைத்தொடர்ந்து பூம்பல்லக்கு அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது.

Next Story