தர்மபுரியில், திருமாவளவனை கண்டித்து பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம் - எதிர்த்து போராடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேர் கைது
தர்மபுரியில் திருமாவளவனை கண்டித்து பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு எதிராக போராடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெண்களை இழிவாக பேசியதாக கூறி பா.ஜனதா சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் வரதராஜன், பிரபாகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கலைச் சரவணன் ஆகியோர் முன்னிலை வகிதித்தனர்.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் சிவன், செல்லப்பாண்டியன், கணேசன், சரவணன், கிருத்திகா, அருணா, மகளிர் அணி மாவட்ட தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட செயலாளர்கள் சங்கீதா, சரிதா, இளைஞரணி மாவட்ட தலைவர் புவனேஷ், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பெண்களை இழிவாக பேசிய தொல்.திருமாவளவன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் நகர செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் குமரன், சந்தானமூர்த்தி, முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் பெருமாள், பொறியாளர் அணி நிர்வாகி விஜயகுமார், நகர பொறுப்பாளர்கள் வசந்த், சபரி, நிர்வாகிகள் பா.ஜனதாவினரை கண்டித்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், திருமாவளவனுக்கு ஆதரவாகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இரு கட்சியினரையும் தடுத்து நிறுத்தினர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கண்டன கோஷங்கள் எழுப்பியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த கடைகள் திடீர் என்று அடைக்கப்பட்டன. சிறிது நேரம் பரபரப்புக்கு பிறகு போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 15 பேரை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story