திடீரென டயர் வெடித்ததால் விபத்து: தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் படுகாயம் - டிரைவருக்கு வலைவீச்சு


திடீரென டயர் வெடித்ததால் விபத்து: தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் படுகாயம் - டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Oct 2020 3:45 PM IST (Updated: 28 Oct 2020 3:32 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே திடீரென டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து ஆச்சாள்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் மங்கனம்பட்டு என்ற பகுதியில் ஆச்சாள்புரம் நோக்கி நேற்றுமுன்தினம் இரவு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கு சாலையோரம் இருந்த பானிபூரி ஸ்டால் மீது மோதி அதே வேகத்தில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மீது மோதியது.

இதைக்கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் டிரைவரின் கட்டுப்பாட்டுக்குள் வராத அந்த கார் அங்கு நின்று கொண்டிருந்த மகேந்திரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிளின்டன்(வயது24), மாங்கானபட்டு கிராமத்தை சேர்ந்த விவேக் (30), சிவராஜ் (38), தண்டேசநல்லூரை சேர்ந்த விக்னேஷ்(18), மகேந்திரப்பள்ளியை சேர்ந்த பிரவீன்குமார்(23) ஆகியோர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த 5 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமான கார் மற்றும் அதன் டிரைவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை கொள்ளிடத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் அரசு கலைக்கல்லூரி அருகே விபத்துக்கு காரணமான கார் டயர் வெடித்து நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காரை பறிமுதல் செய்து டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story