குமரி மாவட்டம் கருங்கலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் பயங்கர தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்
குமரி மாவட்டம் கருங்கலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
நாகர்கோவில்,
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., இவர், கருங்கலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். வீட்டின் கீழ் பகுதியில் அவருடைய தாயார் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., அவருடைய மனைவி, 2 மகன்கள் ஒரு அறையில் தூங்கினர். மற்றொரு மகன் தனி அறையில் தூங்கினார். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வின் மனைவி தினமும் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். நேற்று அதிகாலையும் அவர் பிரார்த்தனை செய்வதற்காக எழுந்தார்.
வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், எதையாவது சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காமல் வந்துவிட்டோமோ என்று நினைத்துக்கொண்டு படுக்கையறையை விட்டு வெளியே வந்தார். படுக்கை அறையின் வெளிப்பகுதியில் இருந்த குளிர்சாதன பெட்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதோடு துணி துவைக்கும் எந்திரம், சமையல் அறையில் இருந்த மற்ற பொருட்கள், வெளியே வைத்திருந்த சோபா மற்றும் ஏ.சி. ஆகியவையும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தன.
இதைப் பார்த்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் தூக்கம் களைந்து ஓடி வந்தனர். அதோடு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.
வெளிப்பகுதியில் இருந்த பிரதான பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்ததால் தரை பகுதி மிகவும் சூடாக இருந்துள்ளது. அதோடு குளிர்சாதன பெட்டி இருந்த இடத்தில் தரையில் வெடிப்பு ஏற்பட்டது. படுக்கையறையின் வெளிப்பகுதியில் குளிர்சாதன பெட்டி இருந்ததால் அவர்களால் உடனே அறையை விட்டு வெளியே வர சிரமம் ஏற்பட்டது.
எனினும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அனைவரும் வெளியே வந்துவிட்டனர். இன்னொரு மகன் படுத்து இருந்த அறைக்கதவில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அறைக்குள் இருந்து எம்.எல்.ஏ. மகன் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். பின்னர் ஜன்னல் கம்பியை எந்திரம் கொண்டு அறுத்து அவரை வெளியே கொண்டு வந்தனர். இதற்கிடையே வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் அக்கம் பக்கத்தினர் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் தீ அடுத்தடுத்த பொருட்களுக்கு பரவத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். நள்ளிரவில் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பற்றியது தெரியவந்தது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வின் மனைவி சிறிது நேரம் தாமதமாக எழுந்திருந்தால் கூட தீயானது படுக்கை அறைக்கும் பரவி இருக்கும். தீ முழுவதுமாக பரவுவதற்கு முன்னதாக தெரிந்துவிட்டதால் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்து காரணமாக வீட்டில் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
Related Tags :
Next Story