மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர் - சாலைமறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது


மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர் - சாலைமறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2020 10:30 AM GMT (Updated: 28 Oct 2020 10:16 AM GMT)

மனுதர்ம நூலை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

மனுதர்ம நூல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனு தர்ம நூலை தடை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திருவாரூர் கல்பாலத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக புறபட்டனர். ஊர்வலத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வடிவழகன் (வடக்கு) , செல்வன் (தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட பொருளாளர் வெற்றி, மாவட்ட துணை செயலாளர் முல்லை வளவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்த போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுட்டனர். இதனால் திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் மறியிலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.

Next Story