மாத்தூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


மாத்தூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2020 11:00 AM GMT (Updated: 28 Oct 2020 10:50 AM GMT)

மாத்தூரில் தி.மு.க.பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் பாலசந்தர் (வயது 38). மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளரான இவரை கடந்த 24-ந் தேதி மாலை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் மாத்தூரில் வசிக்கும் ராப்பூசலை சேர்ந்த பழனியாண்டி மகன்கள் பாலமுத்து, முருகானந்தம், சேகர், அவர்களது மைத்துனர் அன்னவாசல் அருகே உள்ள பூங்குடியை சேர்ந்த பாலாஜி மற்றும் இவர்களது நண்பர்கள் மாத்தூரைச் சேர்ந்த நீலமணிகண்டன், முகமது யூனுஸ் மகன் ஈசாக், நந்தகுமார், சதீஷ், திருச்சி அரியமங்கலத்தில் வசிக்கும் மாத்தூரை சேர்ந்த சக்திவேல், முருகானந்தம் மகன் விக்கி உள்ளிட்ட பலர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தநிலையில் திருச்சி அரியமங்கலத்தில் சக்திவேல் பதுக்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக அவர்களுக்குள் போட்டி இருந்து வந்தது. மேலும் கட்டப்பஞ்சாயத்து நடத்தி பாலசந்தர் அதிக பணம் சம்பாதித்து வந்தார். இது தொடர்பாகவும் அவர்களுக்கும் மோதல் உருவாகி ஒருவரை, ஒருவர் போலீசில் காட்டிகொடுத்துள்ளனர். இதன்காரணமாக 2 தரப்பினர் இடையே விரோதம் நீண்டுகொண்டே போனது. இதன் காரணமாக சக்திவேல் தரப்பினர் பாலசந்தரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் கைது செய்யப்பட்ட சக்திவேலை மாத்தூர் போலீசார் கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருமயம் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு இக்கொலையில் தொடர்புடைய பழனியாண்டி மகன்கள் பாலமுத்து, முருகானந்தம், சேகர் உள்ளிட்ட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இன்று (புதன்கிழமை) கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Next Story