திருச்சி திருவானைக்காவலில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 வாலிபர்கள் கைது - தாய்-மகன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
திருச்சி திருவானைக்காவலில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். முக்கிய கொலையாளிகளான தாய்-மகன் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி திருவானைக்காவல் அருகில் உள்ள மணல்மேடு மேலவிபூதி பிரகாரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முருகன் (வயது 47). இவரது மனைவி புஷ்பவல்லி (33). இவர்கள் வீட்டின் பின்புறம் சில ஆடுகளை வளர்த்து வருகிறார்கள்.
திருவானைக்காவல் பாரதிதெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவரது மகன் மணிகண்டன் (25). இவர்கள், தங்களது வீடு அருகே இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்கள். கடந்த 24-ந் தேதி நள்ளிரவு மணிகண்டன் தனது நண்பர்கள் சிலருடன் முருகன் வீட்டில் உள்ள ஆடுகளை திருடும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது நாய் குரைத்த சத்தம் கேட்டு முருகன் குடும்பத்துடன் வீட்டின் பின்பகுதிக்கு வந்தார். ஆடு திருட வந்தவர்களை கண்டதும், அவர்களை முருகன் மற்றும் அவரது மனைவி புஷ்பவல்லி ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் சண்டை ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசில் இரு தரப்பிலும் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனாலும், இறைச்சிக்கடை நடத்தி வரும் பரமேஸ்வரி, அவரது மகன் மணிகண்டன் ஆகியோருக்கு முருகன் மீது கடும் பகை ஏற்பட்டது. அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று முன்தினம் மணிகண்டன், அவரது தாயார் பரமேஸ்வரி ஆகியோர் மணிகண்டனின் நண்பர்கள் 6 பேருடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முருகன் வீட்டிற்கு சென்று அவரை வெட்டிக்கொலை செய்தனர்.
அதை தடுக்க வந்த மனைவி புஷ்பவல்லிக்கும் வலது கை, தலை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த கொலை குறித்து ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடும் கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய மணிகண்டனின் நண்பர்களான மேலகொண்டையம்பேட்டையை சேர்ந்த சரவணன் மகன் சச்சின் என்ற சச்சிதானந்தம் (19), பாரதி தெருவை சேர்ந்த பூபதி மகன் பாலா என்ற தனவேந்தன் (19), ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் மேலூர் ரோட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் கோபாலகிருஷ்ணன் (20) மற்றும் ஸ்ரீரங்கம் செக்கடி லைன் பகுதியை சேர்ந்த முரளி (22) ஆகிய 4 பேரை நேற்று ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மணிகண்டன், அவரது தாயார் பரமேஸ்வரி மற்றும் ராஜேஷ், முத்துலட்சுமி ஆகிய 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story