பச்சை மலையில் சாலை வசதி கேட்டு உப்பிலியபுரத்தில் மலைவாழ் மக்கள் மறியல் - 120 பேர் கைது


பச்சை மலையில் சாலை வசதி கேட்டு உப்பிலியபுரத்தில் மலைவாழ் மக்கள் மறியல் - 120 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2020 11:15 AM GMT (Updated: 28 Oct 2020 11:16 AM GMT)

பச்சை மலையில் சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் உப்பிலியபுரத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

உப்பிலியபுரம்,

சோபனபுரம் முதல் பச்சைமலை டாப் செங்காட்டுபட்டி வரை மலைகளிலுள்ள அனைத்து சாலைகளையும் நெடுஞ்சாலை துறையில் இணைக்கவும், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிட கோரியும், வனத்துறையினரை கண்டித்தும் தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி சார்பாக உப்பிலியபுரத்தில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

உப்பிலியபுரம் அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு பச்சைமலை மலைவாழ் மக்கள், தென்புறநாடு மந்திரி, தென்புறநாடு நாட்டு கவுண்டர், ஆத்திநாடு மந்திரி, ஆத்திநாடு நாட்டு கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 15 லாரிகளில் வந்து சாலை மறியலில் கலந்து கொண்டனர்.

சாலை பணிகளை துரிதப்படுத்தவும், மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இணையதள சேவைகளை நெறிப்படுத்தவும், மாணவர்களின் நலனை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்தை வேண்டியுள்ள மலைவாழ் மக்கள், தவறும் பட்சத்தில், பச்சைமலை மலைவாழ் மக்கள் அனைவரது ஆதார் அட்டைகளையும், ரேஷன் கார்டுகள் அனைத்தையும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க போவதாகவும், வர இருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் போராட்டத்தின் போது அறிவித்தனர்.போராட்டத்தையொட்டி முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குருநாதன்(துறையூர்), முத்துக்குமார் (முசிறி), கண்ணதாசன் (தா.பேட்டை), ரமேஷ் (போக்குவரத்து) மற்றும் 50-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறையூர் தாசில்தார் அகிலா தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் மலைவாழ் மக்கள், போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மற்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது.

Next Story