விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.2¼ லட்சம் பறிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி


விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.2¼ லட்சம் பறிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 28 Oct 2020 6:45 PM IST (Updated: 28 Oct 2020 6:44 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலக அறையில் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு நாகர்கோவிலை சேர்ந்த விஷ்ணுபரண் (வயது 37) என்பவர் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் குரூப்-1 தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் பெற்றவர்.

இவரது அலுவலகத்திற்கு பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பல்வேறு காரணங்களுக்காக நேரடியாக வந்து லஞ்ச பணம் கொடுப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா, இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா ஆகியோர் கண்காணிப்பு அலுவலர் பொன்ராஜ் தலைமையில் நேற்று பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகத்தை கண்காணித்தனர். அப்போது வெம்பக்கோட்டை யூனியன் ரெங்கபாளையம் பஞ்சாயத்து துணை தலைவர் ராமர் என்பவர் உதவி இயக்குனர் அலுவலகத்திற்குள் சென்றார்.

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி இயக்குனர் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். இதையடுத்து அவர்கள் ராமரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் திட்ட வேலை நிர்வாக அனுமதி பெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்த விஷ்ணுபரணின் டிரைவர் சரவணகுமார் (50) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரின் பேண்ட் பாக்கெட்டில் ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் அந்த பணத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் கிடந்ததாகவும், அதனை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் கூறிய தகவல் நம்ப முடியாத நிலையில், போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்படி பணம், பல்வேறு பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் லஞ்சமாக பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் விஷ்ணுபரண், சரவண குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரியிடமும், டிரைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story