விழுப்புரத்தில், நூதன முறையில் கார் திருட்டு - வாலிபர் கைது


விழுப்புரத்தில், நூதன முறையில் கார் திருட்டு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2020 7:30 PM IST (Updated: 28 Oct 2020 7:20 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நூதன முறையில் காரை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேல காவேரி ஜாமியா நகர் பகுதியை சேர்ந்தவர் சையத் முஜிபுர்ரகுமான். இவர் சென்னையில் தங்கி தனக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், காரை இணையதளம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்த சையத் முஜிபுர்ரகுமான், தனது காருக்கான முழுவிவரத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார். இதைபார்த்த 2 பேர், சையத் முஜிபுர்ரகுமானை தொடர்பு கொண்டு காரை நல்ல விலைக்கு விற்று தருவதாக கூறினர்.

மேலும் அவர்கள் 2 பேரும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஒருவர் காரை விலைக்கு கேட்பதாக ஆசைவார்த்தை கூறி, சையத் முஜிபுர்ரகுமானை விழுப்புரத்துக்கு அழைத்து வந்தனர். அதன்பிறகு அவர்கள் 2 பேரும் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் காரை நிறுத்துமாறு கூறினர். பின்னர் அவர்கள் சையத் முஜிபுர்ரகுமானிடம் அருகே உள்ள ஓட்டலில் உணவு வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதை நம்பிய அவர் காரில் அவர்களை விட்டுவிட்டு சாலையோர ஓட்டலுக்கு சென்றார். பின்னர் உணவு பொட்டலங்களை வாங்கி கொண்டு திரும்பியபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் அதில் அமர்ந்திருந்த 2 பேரையும் காணவில்லை. காரை தன்னுடன் வந்த மர்மநபர்கள் 2 பேர் திருடிச் சென்றிருப்பது சையத் முஜிபுர்ரகுமானுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சையத் முஜிபுர்ரகுமான் தன்னை ஏமாற்றி காரை திருடிச் சென்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தனது காரை மீட்டு தரவேண்டும் என்று விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படை போலீசார் புறவழிச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் சந்துரு என்ற ராஜபாண்டியன் (வயது 35), மதுரையை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் காரை திருடிய ராஜபாண்டியன் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று மாலை சாப்பிட்டு கொண்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த ராஜபாண்டியனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த கார் மீட்கப்பட்டது. மேலும் கார் திருட்டில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story