சிதம்பரத்தில் பரபரப்பு: இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி வீடு புகுந்து ஆசிரியை மகள் பலாத்காரம் - வீடியோ எடுத்து மிரட்டிய என்ஜினீயரிங் மாணவர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் ஆசிரியையின் மகளிடம் அறிமுகமான என்ஜினீயரிங் மாணவர், அவரை வீடு புகுந்து பலாத்காரம் செய்தார். மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டல் விடுத்து வந்த நிலையில் தற்போது போலீசில் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியை. இவரது மகள் 15 வயது சிறுமி. இவர் தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஆசிரியை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மகள் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் ஆசிரியை வீட்டுக்கு திரும்பினார். அப்போது கதவை திறந்த அவரது மகள், பதற்றத்துடன் காணப்பட்டார்.
மகளை பார்த்து என்ன நடந்தது? என்று கேட்ட போது, அவர் படுக்கை அறைக்குள் ஒருவர் இருப்பதாக கைகாட்டியுள்ளார். அதில் படுக்கை அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. மகள் வெளியே இருக்க, அந்த அறைக்குள் இருப்பது யார்? என்ற அச்சத்துடனும், குழப்பத்துடனும் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார் ஆசிரியை.
இதற்கிடையே சிதம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகர போலீசார் அங்கு விரைந்து வந்தனர். படுக்கை அறை கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்த போது, அங்கிருந்த நபர் குளியலறைக்குள் சென்று உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குளியலறையில் பதுங்கிருந்த அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் விருத்தாசலம் பெரியவடவாடி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 20) என்பதும், இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்ததற்கான காரணம் குறித்து கேட்ட போது, திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
ஆசிரியையின் மகள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். இவருடன் ஜெயக்குமார் அறிமுகமாகி உள்ளார். தொடக்கத்தில் நட்புரீதியாக இருவரும் பேசி வந்துள்ளனர். இதை தொடர்ந்து ஜெயக்குமார், காதல் ஆசை காட்டி அவரை தனது வலையில் விழ வைக்க திட்டமிட்டார். இதை தொடர்ந்து நேரில் சந்தித்து பேச வருவதாக கூறி ஆசை வார்த்தைகளை அடுக்கடுக்காக அள்ளி விட்டுள்ளார். இதில் தன்னையே மறந்த மாணவி, நேரில் சந்திக்கவும் இசைவு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி ஜெயக்குமார் மாணவியின் வீட்டுக்கே நேரடியாக வந்துள்ளார். அப்போது அவர்களது வீட்டில் யாரும் இல்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜெயக்குமார், மாணவியை பலாத்காரம் செய்தார். மேலும் அதை தனது செல்போனிலும் வீடியோ எடுத்துக் கொண்டார்.
இதை தொடர்ந்து, இந்த வீடியோவை வைத்து மிரட்டி, மாணவியை தன்னுடைய ஆசைக்கு மீண்டும் இணங்க வற்புறுத்தியுள்ளார். அப்போது, தான் நேற்று முன்தினம் மாணவியின் தாய் வீட்டில் இல்லாததை அறிந்த ஜெயக்குமார் மீண்டும் தனது ஆசையை நிறைவேற்ற வீட்டுக்குள் புகுந்துள்ளார். ஜெயக்குமாரின் மிரட்டலுக்கு அஞ்சிய மாணவியும், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருந்துள்ளார். அப்போது தான் அதிர்ஷ்டவசமாக மாணவியின் தாய் பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். இதையடுத்து ஜெயக்குமார் கையும் களவுமாக அவர்களிடம் சிக்கினார்.
தனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கதறி அழுத தாய், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story