நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் பா.ஜ.க.வினர் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம் - 834 பேர் கைது
நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 834 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பெண்களை பற்றி இழிவாக பேசியதாக கூறி பா.ஜ.க.வினர், இந்து முன்னணி அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருமாவளவன் பேச்சுக்கு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பா.ஜ.க.வில் சேர்ந்த நடிகை குஷ்பு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து பா.ஜ.க. மகளிரணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை குஷ்புவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். இதையடுத்து இந்த 2 ஆர்ப்பாட்டங்களுக்கும் போலீசார் தடை விதித்தனர்.
இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இரு தரப்பினரும் அறிவித்தனர். இதனால் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் சிதம்பரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நடிகை குஷ்பு நேற்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வந்தார். அவரை முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வழிமறித்து கைது செய்தனர். இதை அறிந்ததும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகில் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நகர தலைவர் வேலு.வெங்கடேசன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டனர்.
அதையடுத்து அவர்கள் குஷ்பு கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கைது செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கடலூர் - புதுச்சேரி சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 87 பேரை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மேற்பார்வையிலான புதுநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் சிதம்பரத்தில் சபாநாயகர் தெருவில் உள்ள பா.ஜனதா அரசு தொடர்பு பிரிவு மாவட்ட அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் என்ஜீனியர் ஜெயக்குமார் தலைமையில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட முயன்ற நிலையில் அவர்களை, அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 834 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story