திருப்பூரில் விற்பனையாகாததால் 25 டன் எகிப்து வெங்காயம் தேக்கம்
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் எகிப்து நாட்டு பெரிய வெங்காயத்தின் விற்பனையில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 25 டன் எகிப்து வெங்காயம் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் சில்லரை மற்றும் மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இங்கு கர்நாடகா, மராட்டிய மாநிலங்களிலிருந்து பெரும்பாலும் வெங்காயம் வருகின்றது. இந்த நிலையில் மழை காரணமாக கர்நாடக மாநில வெங்காயத்தின் வரத்து முற்றிலும் குறைய தொடங்கியுள்ளது. இதேபோல் மராட்டிய மாநில வெங்காய வரத்தும் குறைந்துள்ளது. இதனால் வெங்காய விலை கிலோ ரூ.100 -ஐ தாண்டியது.
இதனால் விலையை குறைக்கவும், மக்களுக்கு வெங்காயம் எளிதாக கிடைக்கவும் எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த வெங்காயம் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெளிநாட்டு வெங்காயம் வர தொடங்கி உள்ளதால் நம்நாட்டு வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் வெளிநாட்டு வெங்காயத்தின் விற்பனை குறைவாகவே உள்ளது. கடை, பேக்கரி, ஓட்டல்காரர்கள் இந்த வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.
குறிப்பாக எகிப்து நாட்டு வெங்காய விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. இதுகுறித்து மொத்த வெங்காய வியாபாரி மணிகண்டன் கூறியதாவது;-
எகிப்து வெங்காயம் கடந்த வாரம் கிலோ ரூ. 75 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த சில தினங்களாக இந்த வெங்காயத்தின் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் மார்க்கெட்டில் 25 டன் எகிப்து வெங்காயம் தேக்கம் அடைந்துள்ளது. தற்போது வெங்காய விலை இறங்குமுகத்தில் இருப்பதால் மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் வெங்காய கொள்முதலை தவிர்த்து வருகின்றனர்.
வெங்காயம் விற்பனை இன்றி தேக்கம் அடைவதால் அதன் எடை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. எனவே இவை விரைவில் விற்பனை ஆனால் மட்டுமே பெரும் நஷ்டம் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். எகிப்து வெங்காயம் கிலோ ரூ. 60 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story