குடிபோதையில் தகராறு: தொழிலாளியை கத்தியால் குத்திய 4 பேர் கைது
கோத்தகிரி அருகே குடிபோதையில் தகராறு செய்து, தொழிலாளியை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு, அதனருகில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் 4 பேர், அதே பகுதியில் அமர்ந்து மது குடித்தனர். பின்னர் போதை தலைக்கேறியதும் தங்களுக்குள் தகாத வார்த்தைகளால் பேசி கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு அங்கு குடியிருந்து வரும் ராபர்ட் காடியா(வயது 35) என்ற தொழிலாளி வீட்டை விட்டு வெளியே வந்து அவர்களை கண்டித்தார். மேலும் இங்கு குடும்பத்துடன் பலரும் தங்கி உள்ளனர், இப்படி மது குடித்துவிட்டு தகாத வார்த்தைகளால் பேசக்கூடாது, பிறருக்கு தொல்லை கொடுக்காமல் இருங்கள் என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ராபர்ட் காடியாவிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியதோடு, உருட்டு கட்டையால் தாக்கினர்.
இதையடுத்து அங்கு வந்த அவரது மனைவி கேத்தரினா(34), பக்கத்து வீட்டுக்காரர்கள் உஷா(45), பவுலோஸ்(38) ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்த அந்த நபர்களை தடுக்க முயன்றனர். அப்போது அவர்களையும் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே திரண்டு வந்த அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அந்த நபர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் படுகாயம் அடைந்த ராபர்ட் காடியா மற்றும் லேசான காயம் அடைந்த அவரது மனைவி கேத்தரினா, உஷா, பவுலோஸ் ஆகியோரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராபர்ட் காடியாவை கத்தியால் குத்திய மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுனில்(47), சஞ்சய்(35), தீனா(36), நேபாளத்தை சேர்ந்த ஜீவன்(21) ஆகிய 4 பேரை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று அவர்கள் 4 பேரும் கக்குச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் கோத்தகிரி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story