உடலை வாங்க மறுத்து போராட்டம்: டாக்டர் தற்கொலைக்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்க - போலீஸ் சூப்பிரண்டிடம், எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்


உடலை வாங்க மறுத்து போராட்டம்: டாக்டர் தற்கொலைக்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்க - போலீஸ் சூப்பிரண்டிடம், எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Oct 2020 4:45 PM GMT (Updated: 28 Oct 2020 4:34 PM GMT)

நாகர்கோவிலில் டாக்டர் தற்கொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலை அடுத்த பறக்கை அருகில் இலந்தவிளையைச் சேர்ந்தவர் சிவராமபெருமாள் (வயது 43). டாக்டரான இவர் பறக்கை பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணியில் துணை அமைப்பாளராகவும் செயல்பட்டார்.

இவருடைய மனைவி சீதா அகஸ்தீஸ்வரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு துர்கா, லீலா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் டாக்டர் சிவராமபெருமாள் தன்னுடைய ஆஸ்பத்திரியில் ஓய்வறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதமும் அங்கு இருந்தது. ஒரு போலீஸ் அதிகாரி தன்னையும், தனது குடும்பத்தினரையும் நடுரோட்டில் வைத்து தரக்குறைவாக பேசினார். எனவே அந்த போலீஸ் அதிகாரிதான் தனது சாவுக்கு பொறுப்பு என்று எழுதி வைத்திருந்தார்.

மேலும் அவருடைய செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில், இறப்பதற்கு முன் டாக்டர் சிவராமபெருமாள் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு போன் செய்து பேசியுள்ளார். அந்த உரையாடலை செல்போனில் பதிவும் செய்துள்ளார். அதில் தனது சாவுக்கு ஒரு போலீஸ் அதிகாரியும், தன்னுடைய மருத்துவ படிப்பு தொடர்பாக அடிக்கடி அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய தன்னுடைய ஊரைச் சேர்ந்த உறவினர் ஒருவரும்தான் காரணம் என சிவராமபெருமாள் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே டாக்டர் சிவராமபெருமாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு நேற்று காலை பிரேத பரிசோதனை நடந்தது. இதையொட்டி டாக்டரின் உறவினர்கள் அங்கு திரண்டிருந்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்தபோது உறவினர்கள், சிவராமபெருமாளின் சாவுக்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்கள் டாக்டர் சிவராமபெருமாளின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவர்களின் கோரிக்கை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனை சந்தித்து பேசுவதற்காக அங்கிருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 2 எம்.எல்.ஏ.க்களும் புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம், எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும், தற்கொலை செய்த டாக்டர் சிவராமபெருமாள் சாவுக்கு காரணமான அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். அதற்கு போலீஸ் சூப்பிரண்டு, இதுதொடர்பாக விசாரணை நடத்த குளச்சல் உதவி சூப்பிரண்டு தலைமையில் போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளேன். இந்த விசாரணை முடிந்ததும் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே போராட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.

இந்த தகவலை எம்.எல்.ஏ.க்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டாக்டரின் உறவினர்களிடமும் தெரிவித்தனர். அதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு டாக்டர் சிவராமபெருமாளின் உடலை பெற்றுக் கொண்டனர்.

Next Story