மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது உறவினர்கள் மறியல்


மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 29 Oct 2020 12:08 AM GMT (Updated: 29 Oct 2020 12:08 AM GMT)

மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. வெட்டியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோட்டைப்பட்டினம், 

புதுக்கோட்டை மாவட்டம், பொத்தையன் வயல் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 49). இவர் ஜெகதாப்பட்டினம் பகுதியில் எடைமேடை( வே பிரிட்ஜ்) நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 13-ந் தேதி இவருக்கும், கோடாக்குடியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் முத்துக்குமார் (47) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முத்துக்குமார் தாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மீது ஜெகதாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று சிவக்குமார் மீமிசல் அருகே உள்ள பொன்பேத்தி என்னும் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். பாப்பனேந்தல் பிரிவு சாலை அருகே அவர் வந்தபோது ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் சிவக்குமாரை வழிமறித்து சரமாரியமாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

உறவினர்கள் மறியல்

இதில் அவருக்கு தலையில் பலத்த வெட்டுப்பட்டு ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவக்குமாரின் உறவினர்கள் ஜெகதாப்பட்டினம்-சி.ஆர். சாலையில் அமர்ந்து இதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன் விரோதம் காரணமாக சிவக்குமார் அரிவாளால் வெட்டப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story