தஞ்சை பண்ணை பசுமை கடையில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை


தஞ்சை பண்ணை பசுமை கடையில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை
x
தினத்தந்தி 29 Oct 2020 5:14 AM GMT (Updated: 29 Oct 2020 5:14 AM GMT)

தஞ்சை பண்ணை பசுமை கடையில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை நடக்கிறது. விரைவில் வெங்காயம் விற்று தீர்ந்ததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தஞ்சாவூர்,

சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்னவெங்காயம் தென்மாநில சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் உணவு பொருட்களில் ஒன்றான சின்னவெங்காயம் சைவம் மற்றும் அசைவம் என எல்லா சமையல்களிலும் பயன்படுத்தக்கூடியவையாகும். வெங்காயத்தை வெட்டும்போது கண்ணில் நீர் வரவழைக்கும் தன்மையை கொண்டுள்ளது. ஆனால் இப்போது வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணில் நீர் வந்துவிடுகிறது.

தமிழகத்துக்கு வெங்காயம் சப்ளை செய்யும் மாநிலங்களான மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆனால் தற்போது வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. தஞ்சையிலும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.

ரூ.45-க்கு விற்பனை

சின்ன வெங்காயம் ரூ.110 முதல் ரூ.120 வரையும், பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரி ரூ.80 முதல் ரூ.100 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் வெங்காயத்தை குறைந்த அளவே மக்கள் வாங்கி செல்கின்றனர். வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தநிலையில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழகஅரசு முடிவு செய்தது. அதன்படி ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை காவேரி சிறப்பு அங்காடி வளாகத்தில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை நேற்றுமுன்தினம் தொடங்கியது.

ஏமாற்றம்

இதற்காக 1½ டன் பெரிய வெங்காயம் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டது. தஞ்சையில் 2-வது நாளாக நேற்று பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெங்காயம் வாங்குவதற்காக பெண்கள் உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர். வயதானவர்களும் பைகளுடன் வந்திருந்தனர்.

ஒரே நபர் அதிகஅளவில் வெங்காயத்தை வாங்கி செல்வதை தவிர்க்க ஒரு நபருக்கு 2 கிலோ வெங்காயம் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. வெங்காய விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலேயே வெங்காயம் விற்று தீர்ந்துவிட்டது. இதனால் வரிசையில் நின்ற பலர் வெங்காயம் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அதேபோல் பலர் வெங்காயம் வாங்குவதற்காக வந்துவிட்டு வெறும் கையுடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர். அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அதிகஅளவில் வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகாரிகள் கருத்து

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, 2 நாட்களில் 1½ டன் வெங்காயம் விற்பனையாகி உள்ளது. கூடுதல் வெங்காயம் கேட்டு இருக்கிறோம். 15 டன் வெங்காயம் நாளை(அதாவது இன்று) அல்லது ஓரிரு நாட்களில் தஞ்சைக்கு வரும். தஞ்சையில் மட்டுமின்றி பேராவூரணி, பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளிலும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story