ஏரியில் தண்ணீர் நிரம்ப தடையாக இருந்த ஆக்கிரமிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகளே அகற்றினர்


ஏரியில் தண்ணீர் நிரம்ப தடையாக இருந்த ஆக்கிரமிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகளே அகற்றினர்
x
தினத்தந்தி 29 Oct 2020 5:19 AM GMT (Updated: 29 Oct 2020 5:19 AM GMT)

தஞ்சை அருகே ஏரியில் தண்ணீர் நிரம்ப தடையாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகளே அகற்றினர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை மாவட்டம் புதுக்குடி அருகே உள்ள உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக அந்த பகுதியில் உள்ள வாழவந்தான் கோட்டை ஏரியில் தண்ணீர் நிரப்பப்பட்டது.

அதைத்தொடர்ந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ஏரியில் ஆக்கிரமிப்பு

இந்த நிலையில் தஞ்சையை அடுத்த வெண்டயம்பட்டி ஊராட்சி ராயமுண்டான்பட்டி கிராமத்தில் உள்ள மருவத்து ஏரியில் தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து ஏரிக்குள்ளேயே கப்பி கற்கள் மற்றும் மண்ணால் சாலை அமைத்து இருந்தார். இந்த ஆக்கிரமிப்பு ஏரியில் தண்ணீர் நிரம்ப தடையாக இருந்தது. ஆக்கிரமிப்பு காரணமாக ஏரியில் 3 நாட்கள் பாய வேண்டிய தண்ணீர் 2 நாட்களோடு நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் மழை பெய்தால் ஏரியில் உடைப்பு ஏற்படும் அபாயமும் இருந்தது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியில் தண்ணீர் முழுமையாக நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறை ஆற்று பாசன கோட்ட அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திலும் ஆக்கிரமிப்பை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து ராயமுண்டான்பட்டி மருவத்து ஏரியில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு தடையாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று பொக்லின் எந்திரம் மூலமாக ஏரியில் அமைக்கப்பட்டிருந்த சாலை அகற்றப்பட்டது. இதனால் ஏரியின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் செல்ல வழி ஏற்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பூதலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஏரியை பூதலூர் தாசில்தார் சிவக்குமார், பொதுப்பணித்துறை பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு அளவீடு செய்தனர்.

Next Story