குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
பெருந்துறையில் குண்டும், குழியுமான சாலைகளை பார்வையிட்ட தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.
சென்னிமலை,
பெருந்துறை தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மிகவும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்காக பெருந்துறை நகரப்பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன. இந்த பள்ளங்களை எல்லாம் உடனடியாக மூட பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாசலம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்தநிலையில் பெருந்துறை நால்ரோடு பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரையிலான பகுதியில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டங்களுக்கு தோண்டப்பட்ட குழிகள் மண் நிரப்பி மூடப்பட்டு இருந்தது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலை மிகவும் பழுதடைந்தது. வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்துக்கு தடையாக சாலை மாறியது.
எம்.எல்.ஏ. ஆய்வு
இதுபற்றி தகவல் அறிந்த தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நேற்று சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் பூபாலன், உதவி நிர்வாக பொறியாளர் வீரராஜன், இளநிலை பொறியாளர் பழனிச்சாமி ஆகியோர் வந்தனர். குண்டும், குழியுமாக கிடக்கும் ரோட்டின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் வரை எம்.எல்.ஏ. நடந்து சென்று பார்வையிட்டார். பின்னர் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பெருந்துறை பகுதியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு இடையூறாகவும் இருக்கும் சாலையை உடனடியாக செப்பனிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் குறைகளையும் அவர் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் டி.டி.ஜெகதீஸ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் உமாமகேஷ்வரன், பெருந்துறை பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கே.எம்.பழனிசாமி மற்றும் அருள்ஜோதி செல்வராஜ், கயிலங்கிரி குப்புசாமி, துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story