தலைவாசல் அருகே மழையால் வீட்டு சுவர் இடிந்து மூதாட்டி பலி
தலைவாசல் அருகே, மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.
தலைவாசல்,
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்தது. தலைவாசல், ஊனத்தூர், புத்தூர், வரகூர், சிறுவாச்சூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியன். விவசாயி. இவரது மனைவி பெரியம்மாள் (வயது 60). இவர்களுக்கு மல்லிகா, உண்ணாமலை ஆகிய மகள்களும், ராமசாமி என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. கலியன் ஏற்கனவே இறந்து விட்டார். பெரியம்மாள் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு மகன் ராமசாமி தாய் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது பெரியம்மாள் தூங்கிக் கொண்டிருந்த கட்டிலின் மீது மண் சுவர் இடிந்து விழுந்து இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி, தாயாரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுபற்றி ஊனத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் மற்றும் தலைவாசல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆத்தூர் தாசில்தார் அன்புசெழியன், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன், தலைவாசல் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அஞ்சலை ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ், பால் கூட்டுறவு தலைவர் சின்னதம்பி என்ற ஞானபிரகாசம் ஆகியோர் வந்து நேரில் பார்வையிட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தலைவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் பற்றி தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மழையால் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story