ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக விவசாயியிடம் ரூ.11 ஆயிரம் அபேஸ் செய்தவர் கைது


ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக விவசாயியிடம் ரூ.11 ஆயிரம் அபேஸ் செய்தவர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2020 6:15 PM IST (Updated: 29 Oct 2020 2:39 PM IST)
t-max-icont-min-icon

சிங்காரப்பேட்டையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக விவசாயியிடம் ரூ.11 ஆயிரம் அபேஸ் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 56), விவசாயி. சம்பவத்தன்று சிங்காரப்பேட்டையில் உள்ள ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்த செல்வம், அங்கிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்து கொடுத்து உதவுமாறு கேட்டார். அந்த நபர் ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகி பின்னர் பணம் இல்லை என்று கூறி விட்டு சென்றார். சிறிது நேரத்தில் செல்வத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 ஆயிரத்து 200-ஐ அந்த மர்ம நபர் அபேஸ் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் (52) என்பவர் விவசாயியிடம் 11 ஆயிரத்து 200-ஐ அபேஸ் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அன்பரசனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 2017-ல் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரிடம் ரு.18 ஆயிரமும், திருப்பதி என்பவரிடம் ரூ.29 ஆயிரமும், சுப்ரமணி என்பவரிடம் ரூ.10 ஆயிரமும் அபேஸ் செய்தது தெரியவந்தது.

இதுபோன்று பல ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க வந்த பலரின் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் அபேஸ் செய்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அன்பரசனிடம் ரூ.91 ஆயிரத்து 700-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story