தர்மபுரியில், அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்


தர்மபுரியில், அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2020 9:15 AM GMT (Updated: 2020-10-29T14:39:04+05:30)

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் லில்லி புஷ்பம், மாநில குழு உறுப்பினர் அங்கம்மாள், மாவட்ட பொருளாளர் ஈஸ்வரி, இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட நிர்வாகி சண்முகம் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

அங்கன்வாடி ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். 1992-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களின் பெயர்களை மேற்பார்வையாளர் பதவி உயர்வு பட்டியலில் விடுபடாமல் சேர்க்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். தற்போது 25 ஆண்டுகள் பணி முடித்து பதவி உயர்வு கிடைக்காத அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

அரசின் காலி பணியிடங்களில் இளநிலை உதவியாளர்களாக அங்கன்வாடி ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் ரூ 9 ஆயிரமும், உதவியாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் ஓய்வூதியமாக அளிக்க வேண்டும். கியாஸ் சிலிண்டர் பில் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story