சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை - விடிய, விடிய நடந்ததால் பரபரப்பு


சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை - விடிய, விடிய நடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Oct 2020 2:15 PM IST (Updated: 29 Oct 2020 2:58 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர். விடிய, விடிய நடைபெற்ற இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கந்தம்பட்டி புறவழிச்சாலை பகுதியில் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென வந்தனர்.

பின்னர் அலுவலகத்தில் கதவை உள்புறமாக அவர்கள் பூட்டினர். அலுவலகத்தில் இருந்த சான்றிதழ்கள் ஒவ்வொன்றையும் பார்வையிட்டனர். மேலும் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்கு பீரோவில் இருந்த சான்றிதழ்களையும் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த வாகன ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள், உதவியாளர்கள் என 10-க்கும் மேற்பட்டவர்களை அலுவலகத்துக்கு வெளியே உள்ள வளாகத்தில் வரிசையாக நாற்காலிகளில் அமர வைத்தனர். அவர்களை ஒவ்வொருவராக தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை இரவு 8 மணி வரை நீடித்தது. பின்னர் அலுவலகத்தை திறந்து அங்கிருந்த ஊழியர்கள் சிலரை அவரவர் வீட்டிற்கு செல்லும்படி கூறினர். மேலும் பலரிடம் விடிய, விடிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களுக்கு அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் பணம் (லஞ்சம்) பெற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தன. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வகையில் வசூல் செய்யப்படுவதாகவும் தகவல் வந்தது.

அதன் பேரில் தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வாகன ஆய்வாளர்கள், அலுவலர்கள், ஊழியர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறோம். இரவு 10 மணிவரை நடைபெற்ற சோதனையில் லஞ்ச பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

ஆனால் ஒரு சில முறைகேடுகள் நடந்திருப்பது ஆவணங்களை சோதனை செய்தபோது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில் சில ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் பலர் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்து உள்ளது. எனவே புரோக்கர்கள் பலரிடம் தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளோம்.

தேவைப்பட்டால் அவர்களது வீடுகளிலும் இரவில் சோதனை நடத்தப்படும். எனவே இந்த சோதனை மற்றும் விசாரணை விடிய, விடிய நடைபெறும். அதாவது நாளை (இன்று) காலை வரை கூட சோதனை தொடரும். அதன்பிறகுதான் லஞ்ச பணம் எவ்வளவு கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இதில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய சோதனை நடத்திய சம்பவம் நேற்று சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story