போளூர் அருகே, குட்டையில் மூழ்கி அக்காள்-தங்கை பலி - குளிக்க சென்றபோது பரிதாபம்


போளூர் அருகே, குட்டையில் மூழ்கி அக்காள்-தங்கை பலி - குளிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 29 Oct 2020 10:15 AM GMT (Updated: 29 Oct 2020 10:07 AM GMT)

போளூர் அருகே குளிக்க சென்ற அக்காள்-தங்கை குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.

போளூர்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீபக்சிங். வடமாநிலத்தை சேர்ந்த இவர் கூர்காவாக உள்ளார். இவருக்கு 7 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உண்டு. அவர்களில் சாந்தி (வயது 11) பெரியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும், பகவதி (8), காந்திநகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

பெரியகரம் கிராமத்தின் அருகில் உள்ள ஏரி பக்கத்தில் 6 அடி ஆழ குட்டை உள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக குட்டையில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்தநிலையில் சாந்தி, பகவதி ஆகிய இருவரும் நேற்று கிராமத்தின் அருகில் உள்ள குட்டையில் குளிக்க சென்றுள்ளனர்.

தண்ணீர் அதிகமாக இருந்ததாலும், இருவருக்கும் நீச்சல் தெரியாததாலும் அவர்கள் குளிப்பதற்காக குட்டையில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி உள்ளனர். அப்போது அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதைகேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து சென்றனர். அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

அவர்களை பொதுமக்கள் தேடினர். சிறிது நேரத்தில் இருவரும் மீட்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மூச்சுத்திணறி இறந்துவிட்டனர். இதனால் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீபக்சிங், அவருடைய மனைவி சீதாசிங் மற்றும் 5 சகோதரிகள், சகோதரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

போளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story