2 பெண்களை கற்பழித்து கொன்ற வழக்கில்: 5 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - விழுப்புரம் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
2 பெண்களை கற்பழித்துக்கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூத்தனூரை சேர்ந்த 37 வயதுடைய பெண், கடந்த 23.4.2011 அன்று மதியம் தனது வீட்டில் இருந்து மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்றார். மாலை வெகு நேரமாகியும் அந்த பெண் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் அந்த பெண்ணை தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மறுநாள் அதே பகுதியில் உள்ள கூவாகம் ஓடையில் அந்த பெண், நிர்வாண நிலையில் உடலில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர், போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டில் வசித்து வரும் குடும்பத்தை சேர்ந்த 5 பேர்தான், தனது மனைவியை கொலை செய்திருக்கலாம் என கூறியிருந்தார்.
அதன்பேரில் அவர்கள் 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 2 வருடமாகியும் கொலைக்கான துப்பு துலங்கவில்லை, அவர்கள் 5 பேர்தான் இந்த கொலையை செய்ததற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை. இதனால் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றும்படி அப்பெண்ணின் கணவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன்பேரில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் துப்பு துலங்கவில்லை.
இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண், கடந்த 22.6.2012 அன்று அவருடைய நிலத்திற்கு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் மறுநாள் அவருடைய நிலத்தில் உள்ள கிணற்றில் நிர்வாண நிலையில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சூழலில் திருவெண்ணெய்நல்லூர் அருகே எடையாளம் காலனியை சேர்ந்த இளையராஜா என்கிற அம்பிகாபதி (27) என்பவர், கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து, துலங்கம்பட்டை சேர்ந்த பெண்ணை தானும், தனது நண்பர்களும் சேர்ந்து கற்பழித்துக்கொலை செய்ததோடு 3 பவுன் நகையையும் கொள்ளையடித்ததாக கூறினார். இதுதொடர்பாக இளையராஜா மற்றும் அவரது நண்பர்களான எடையாளம் காலனியை சேர்ந்த மதியழகன் (29), வடிவேல் (33), குருபாலன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே மதியழகன் உள்ளிட்ட 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் ஆமூர் காலனியை சேர்ந்த பாலமுருகன் (33) என்பவர் கூத்தனூர் பெண்ணை கற்பழித்துக்கொலை செய்ததோடு அவர் அணிந்திருந்த 10 கிராம் நகையையும் கொள்ளையடித்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் ஆடு, மாடு மேய்க்கும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர்கள் 5 பேரும் சேர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதும், கடந்த 2012-ம் ஆண்டில் திருநாவலூரை சேர்ந்த ஆடு மேய்க்கும் பெண் ஒருவரை கற்பழித்துக்கொலை செய்தது மட்டுமின்றி திருவெண்ணெய்நல்லூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 3 பெண்களை வழிமறித்து கத்திமுனையில் கற்பழித்து அவர்களிடமிருந்த நகைகளை கொள்ளையடித்ததும், இதுபோன்று இவர்கள் 5 பேரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கூத்தனூர் பெண் கொலை வழக்கில் மதியழகன் உள்ளிட்ட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசாரும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தயார் செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் கடலூர் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட மதியழகன், வடிவேல், குருபாலன், இளையராஜா, பாலமுருகன் ஆகிய 5 பேருக்கும் தண்டனை வழங்கி பரபரப்பான தீர்ப்பை கூறினார்.
அந்த தீர்ப்பின் விவரம் வருமாறு:-
சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் கூட்டுச்சதி செய்து கொலை செய்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், தனியாக சென்ற பெண்ணை வழிமறித்து நகையை பறித்த குற்றத்திற்காக 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக 5 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதுபோல் திருவெண்ணெய்நல்லூர் போலீசாரின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மதியழகன், வடிவேல், குருபாலன், இளையராஜா ஆகிய 4 பேருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், தனியாக சென்ற பெண்ணை வழிமறித்து நகையை பறித்த குற்றத்திற்காக 4 பேருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக 4 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார்.
Related Tags :
Next Story