வருகிற 1-ந்தேதி முதல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் - போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்
வேலூர் மீன்மார்க்கெட் அருகேயுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.46 கோடியில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. அதனால் அங்குள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, தாம்பரம், அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், ஓசூர், திருப்பத்தூர் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் இடநெருக்கடி காணப்பட்டது.
அதனால் திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்களை வேலூர் புதிய மீன்மார்க்கெட் அருகேயுள்ள லாரி நிறுத்துமிடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த இடத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பஸ்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி காணப்பட்டதால் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும்படி அவர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் அந்த பகுதி சமப்படுத்தப்பட்டது. பின்னர் அங்கு பயணிகள் நிழற்கூடை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, பஸ்கள் நிறுத்தி வைப்பதற்கான இடங்கள், விரைவுப் பஸ்களுக்கு முன்பதிவு அறை, நேரக்கண்காணிப்பாளர் அறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. ஓரிருநாளில் அனைத்து பணிகளும் முடிந்துவிடும். தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, ஆரணி, திருக்கோவிலூர், விழுப்புரம், திருச்சி மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு பஸ்களும் வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story