பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு; முளைப்பாரி ஊர்வலம் நடந்தது


பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு; முளைப்பாரி ஊர்வலம் நடந்தது
x
தினத்தந்தி 29 Oct 2020 5:00 PM IST (Updated: 29 Oct 2020 4:58 PM IST)
t-max-icont-min-icon

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. முளைப்பாரி ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்ததால் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கமுதி, 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந் தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும்.

இந்த ஆண்டு 113-வது தேவர் ஜெயந்தி விழா மற்றும் 58-வது குருபூஜை விழா நேற்று காலை 9.15 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் முதல் நாளான நேற்று ஆன்மிக விழா நடைபெற்றது. இதையொட்டி ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, பழனி, வெள்ளைச்சாமி, தங்கவேல் என்ற ரவி, அழகுராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் பிள்ளையார்பட்டி சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் உள்ளிட்டோர் யாகசாலை பூஜையை நடத்தினர்.

முன்னதாக யாகசாலை பூஜைக்கு கலசத்தை பா.ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலையில் சுமந்துகொண்டு சென்று பூஜையில் கலந்துகொண்டார்.

இதில் மாவட்ட பொருளாளர் கணபதி, ஒன்றிய தலைவர் முருகன், டாக்டர் ராம்குமார், ஒன்றிய கவுன்சிலர் பூபதி ராஜா ஆகியோர் கலந்துகொண்டு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் ஆலய ஓதுவார் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தேவர் ஜெயந்தி விழா, குரு பூஜை தொடக்க நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பெண்கள் நினைவாலயம் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. கமுதி கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர் அங்குள்ள முத்துராமலிங்க தேவர், மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு பசும்பொன் நோக்கி ஊர்வலம் புறப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் கூறினர்.

இதையடுத்து போலீசாருடன் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டமும் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா, இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். சமூக இடைவெளியை கடைபிடித்து ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். இதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. ஊர்வலமாக சென்றவர்கள் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

விழாவில் இன்று (வியாழக்கிழமை) தேவரின் அரசியல் விழாவும், நாளை (வெள்ளிக்கிழமை) குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது. 30-ந் தேதி மாலையில் அரசு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Next Story